வேலூர் சத்துவாச்சாரியில் திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு ஜெயநகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் பரிமளா (வயது 24), அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சண்முகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதைத்தொடர்ந்து அவருடைய மனைவி கல்யாணி குடும்பத்தைக் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் இளம்பெண் பரிமளாவுக்கும், காட்பாடியை அடுத்த லத்தேரியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவருக்கும் அடுத்த (ஏப்ரல்) மாதம் திருமணம் நடக்க இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.
இதற்கிடையே பரிமளாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர், தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். பரிமளாவை அவருடைய குடும்பத்தினரும், உறவினர்களும் சமாதானம் செய்து, திருமணத்துக்கு சம்மதிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கல்யாணி குடும்பத்துடன் வேலூர் சத்துவாச்சாரி வசந்தம்நகர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் பரிமளாவின் திருமண ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்ய தொடங்கினர்.
ஆனால் பரிமளாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் எந்த ஏற்பாடுகளும் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். அவரின் பேச்சை, குடும்பத்தினர் பொருட்படுத்தவில்லை. விரக்தியடைந்த பரிமளா நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார்.
அவரை, குடும்பத்தினர் மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிமளாவை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் கல்யாணி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணத்துக்கு விருப்பம் இல்லாமல் பரிமளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவருடைய குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.