ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் 3 வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் பற்றிய புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் ஏர்பாட்ஸ்
ஆப்பிள் நிறுவனத்தின் புது ஏர்பாட்ஸ் 3 மாடல் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வரை அறிமுகம் செய்யப்படாது என தற்போதைய தகவல்களில் தெரியவந்துள்ளது. பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டு உள்ள புது அறிக்கையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஆடியோ சாதனங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி முந்தைய தகவல்களில் கூறப்பட்டதற்கு மாறாக புது ஹெட்போன்கள் மார்ச் 23 ஆம் தேதி அறிமுகமாகாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏர்பாட்ஸ் 3 மாடலின் உற்பத்தி பணிகள் 2021 மூன்றாவது காலாண்டில் தான் துவங்கும் என கூறப்படுகிறது. புது ஹெட்போனை வடிவமைக்கும் பணிகள் முழுமை பெறாததே இதற்கு காரணம் என தெரிகிறது. மேலும் ஆப்பிள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தான் புதிய ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்தது. அந்த வகையில் மற்றொரு ஆடியோ சாதனத்தை அறிமுகம் செய்ய ஆப்பிள் மேலும் சில காலம் எடுத்துக் கொள்ளலாம்.
ஏற்கனவே வெளியான தகவல்களில் 2021, மார்ச் 23 ஆம் தேதி ஆப்பிள் நிகழ்வு நடைபெறலாம் என்றும் இதில் புதிய ஆடியோ சாதனம் அறிமுகமாகலாம் என்றும் கூறப்பட்டது. எனினும், தற்போதைய தகவல்களில், இந்த விழாவில் புது ஐபேட் மாடல்கள், ஏர்டேக், ஆப்பிள் டிவி ஸ்டிரீமிங் சாதனம் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு இருக்கிறது. இதுவரை மார்ச் மாத ஆப்பிள் நிகழ்வு பற்றி அந்நிறுவனம் எந்த தகவலையும் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.