சேலத்தில் கணவர் இறந்த வேதனையில் ஓய்வுபெற்ற ஆசிரியை கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் காமநாயக்கன்பட்டி மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் டேனியல் மனோகரன். இவருடைய மனைவி மாணிக்கவள்ளி (வயது 54), இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக டேனியல் மனோகரன் இறந்து விட்டார். கடந்த சில நாட்களாக மாணிக்கவள்ளி மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை அவா் கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மகன் மற்றும் குடும்பத்தினர் கதவை நீண்ட நேரமாக தட்டி உள்ளனர். ஆனால் அவர் திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மாணிக்கவள்ளி இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாணிக்கவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணிக்கவள்ளியின் வீட்டில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கழிவறையில் கத்தி ஒன்று கிடந்தது. கத்தியுடன் கழிவறைக்கு சென்ற மாணிக்கவள்ளி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.