கோவை தெற்கு தொகுதியை பா.ஜ.க.வுக்கு ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை தெற்கு தொகுதி தற்போது அ.தி.மு.க. வசம் உள்ளது. இந்த தொகுதி எம்.எல்.ஏ.வாக அ.தி.மு.க. கோவை மாநகர் மாவட்ட செயலாளரான அம்மன் அர்ச்சுனன் உள்ளார்.
இந்த முறையும் அவர் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்தநிலையில் தெற்கு தொகுதியை அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவுக்கு ஒதுக்கியுள்ளதாக இன்று தகவல் பரவியது. இதையடுத்து தெற்கு தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கோவை மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்கள் கோவை தெற்கு தொகுதியை அ.தி.மு.க.வுக்கே ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் அலுவலகத்திலேயே அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் அவர்களை சமாதானம் செய்தனர். தொகுதிகள் முடிவானது பற்றி இன்னும் அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிடவில்லை. அதற்குள் போராட்டம் நடத்தக்கூடாது என அறிவுரை வழங்கினர். இருந்தாலும் அ.தி.மு.க.வினர் அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தெற்கு தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கினால் பதவியை ராஜினாமா செய்வோம் என தெரிவித்து கையில் கடிதமும் வைத்திருந்தனர்.இதனால் கோவை அ.தி.மு.க. அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.