அதிகாரி அபராதம் விதித்ததால் திருப்பூரில் நடுரோட்டில் அமர்ந்து அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் 15-வேலம்பாளையத்தில் இருந்து வீரபாண்டி நோக்கி 1- சி அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் இன்று காலை 7-10 மணியளவில் வேலம் பாளையத்தில் இருந்து புறப்பட்டு திருப்பூர் பழைய பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் டிரைவராக ஞானசேகரன், கண்டக்டராக பழனிச்சாமி பணியில் இருந்தனர்.
பழைய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெறுவதால் பழைய பஸ் நிலைய ரவுண்டானா அருகே பயணிகளை ஏற்றி இறக்கி செல்லப்படுகின்றனர்.
இந்தநிலையில் டிரைவர் ஞானசேகரன், கண்டக்டர் பழனிசாமி ஆகியோர் இன்று காலை பழைய பஸ் நிலைய ரவுண்டானா பகுதிக்கு செல்லாமல் நேராக மேம்பாலம் வழியாக வீரபாண்டி நோக்கி சென்றனர்.
இதையறிந்த அரசு போக்குவரத்து கழக டிக்கெட் செக்கிங் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் விரைந்து சென்று பஸ்சை நிறுத்தியதுடன் கண்டக்டர் பழனிச்சாமி, டிரைவர் ஞானசேகரன் ஆகியோரிடம் எப்படி பழைய பஸ் நிலைய ரவுண்டானா பகுதிக்கு வராமல் செல்லலாம் என்று கண்டித்ததுடன், 2பேருக்கும் அபராதம் விதித்து துறை ரீதியாக நடவடிக்கையும் மேற்கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பழனிச்சாமி, ஞானசேகரன் ஆகியோர் திடீரென திருப்பூர் பல்லடம் சாலையில் நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருப்பூர் பல்லடம் சாலையானது எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படும். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள், தொழிலாளர்கள் பணி நிமித்தமாக வாகனங்களில் பயணிப்பார்கள்.
இந்தநிலையில் அரசு பஸ் ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் பல்லடம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் நின்றன.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருப்பூர் தெற்கு போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஞானசேகரன், பழனிச்சாமியிடம் உங்கள் கோரிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் தெரிவியுங்கள். பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள் என்றனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட 2பேரும் அங்கிந்து பஸ்சை எடுத்தனர்.
இது பற்றி கண்டக்டர் பழனிச்சாமி கூறுகையில், பழைய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடப்பதால் பஸ்சை திருப்பி செல்வதற்கு இடவசதி இல்லாததால் மேம்பாலத்தில் செல்ல முன்பு பணியில் இருந்த அதிகாரி அனுமதி வழங்கியிருந்தார். அதனால்தான் நாங்கள் மேம்பாலத்தில் சென்றோம். தற்போது புதிய அதிகாரி எங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். அபராதம் விதித்துள்ளது எங்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.
இதனிடையே போராட்டம் நடத்திய டிரைவர்களிடம் பொதுமக்கள், பனியன் தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் கூறுகையில், காலையில் பணிக்கு செல்ல வேண்டிய நிலையில் நீங்கள் போராட்டம் நடத்துவது எங்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். நடுரோட்டில் போராட்டம் நடத்தினால் எங்களால் எப்படி வேலைக்கு செல்ல முடியும். உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் பொதுமக்கள் பாதிக்காதவாறு போராட்டம் நடத்தி கொள்ளுங்கள் என்றனர். தொடர்ந்து போலீசார் பொதுமக்கள், தொழிலாளர்களை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தால் திருப்பூரில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.