இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஆட்டத்தில் 73 ரன்கள் மற்றும் 3-வது ஆட்டத்தில் 77 ரன்கள் விளாசிய விராட் கோலி, டி-20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தில் உள்ளார்.
ஏற்கனவே ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம், டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் 5-வது இடம் பிடித்துள்ள விராட் கோலி, தற்போது டி-20 கிரிக்கெட்டிலும் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதன்மூலம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் டாப்-5 தரவரிசைக்குள் இடம்பிடித்திருக்கும் ஒரே வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
மேலும், முதல் மூன்று ஆட்டங்களில் மொத்தமாக 1 ரன் மட்டுமே எடுத்திருந்தாலும், கேஎல் ராகுல் தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறார். ஷ்ரேயஸ் ஐயர் 32 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தில் உள்ளார். ரிஷப் பந்த் 80-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை வாஷிங்டன் சுந்தர் 2 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தைப் பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஷர்துல் தாக்குர் 27-வது இடத்துக்கும், புவனேஷ்வர் குமார் 45-வது இடத்துக்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.