தொகுதிகள், வேட்பாளர் தேர்வு முடிந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறோம் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
சென்னை
தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா மாலைமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி விவரம் வருமாறு:-
கேள்வி:- உங்கள் கட்சிக்கு குறைவான தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதே?
பதில்:- தி.மு.க. கூட்டணி வலுவான கட்சிகள் உள்ள கூட்டணி. இந்த சூழலில் இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகும். தமிழ்நாட்டின் திசை வெளியை நிர்ணயிக்கக்கூடிய தேர்தலாக இருக்கிறது. அந்த அடிப்படையில் அதிகமான கட்சிகள் இடம் பெற்று இருப்பதால் எல்லோருக்கும் பகிர்ந்துதான் கொடுக்க இயலும்.
எங்களது பலத்தை ஒப்பிடுகையில் 2 தொகுதியாக இருந்தாலும் லட்சியத்துக்காக வேண்டி இதை ஏற்றுக் கொண்டோம். முக்கியமாக இன்று பா.ஜனதா பல்வேறு மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்புகளை நடத்தி இருப்பது எல்லோருக்கும் தெரியும்.
கேள்வி:-எந்தெந்த தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது?
பதில்:- தொகுதிகள் இன்னும் இறுதி செய்யப்பட வில்லை. இனிதான் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
கேள்வி:- வேட்பாளர் விவரம் எப்போது அறிவிக்கப்படும்?
பதில்:- இரண்டொரு நாட்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
கேள்வி:- பிரசாரத்தை எப்போது தொடங்குகிறீர்கள்?
பதில்:- தொகுதிகள், வேட்பாளர் தேர்வு முடிந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறோம்.
கேள்வி:- தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பதில்:- அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தின் உரிமைகளை எல்லாம் அடகு வைத்த ஆட்சியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு கேடு ஏற்பட்டு இருக்கிறது. மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு உள்ளது.
பா.ஜனதாவின் தவறான கொள்கைகள் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது. மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது. எனவே தி.மு.க. கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.
இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.