சேலத்தில் வெள்ளிப்பட்டறை தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 43). இவருடைய தம்பி சந்தோஷ் (33).
செல்வம் பெரியபுத்தூரில் உள்ள ஒரு வெள்ளிப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ரேவதி (38). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். கூலி வேலையில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பத்தை கவனித்து வந்தார்.
சந்தோசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. செல்வம் வீட்டின் பக்கத்தில் அவர் தனது தாயாருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் செல்வத்துக்கும், சந்தோசுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இன்று காலையில் செல்வத்திடம், சந்தோஷ் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இந்த தகராறு முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் திடீரென மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் செல்வத்தை நோக்கி சுட்டார்.
அப்போது செல்வம் திரும்பினார். இதில் முதுகில் குண்டு பாய்ந்தது. இதனால் செல்வம் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி அறிந்த அவரது மனைவி ரேவதி மற்றும் உறவினர்கள் பதறி அடித்துக் கொண்டு அங்கு ஓடி வந்தனர். அதற்குள் சந்தோஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவரின் உடலை பார்த்து ரேவதி கதறி அழுதார்.
இது பற்றி தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையுண்ட செல்வத்தின் தந்தை கருங்கண்ணனுக்கு 4 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கருங்கண்ணன் இறந்து விட்டார். இதனால் சொத்தை பிரிப்பதில் அண்ணன், தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சந்தோஷை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
அண்ணனை தம்பி துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.