கள்ளக்குறிச்சி தாலுகா புது உச்சிமேடு ஊராட்சியில் புது உச்சிமேடு, பழைய உச்சிமேடு, பட்டி, ராமநாதபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள 4 கிராமங்களிலும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த புதுஉச்சிமேடு ஊராட்சி தனி வருவாய் கிராமமாக உருவாக்கப்படாமல் கொங்கராயபாளையம் வருவாய் கிராமத்திலேயே உள்ளது. வருவாய் வருமானம், சாதித்சான்று, குடியிருப்பு சான்று, பட்டா மாற்றம், அடங்கல் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் பெறுவது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொங்கராயபாளையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கொங்கராயபாளையத்திலிருந்து பிரித்து புதுஉச்சிமேடை தனி வருவாய் கிராமமாக உருவாக்க வேண்டும் என கூறி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த புது உச்சிமேட்டு கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அங்கிருந்த போலீசார் சமாதானப்படுத்தினர். அதனை தொடர்ந்து கிராம மக்கள், மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் புதுஉச்சிமேட்டை தனி வருவாய் கிராமமாக உருவாக்க வேண்டும் என கோரி மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவை பெற்ற அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.