மழைநீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தைக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
மழைநீர் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இஆப, அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், மழைநீர் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இஆப, அவர்கள் இன்று (22.12.2021) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
மழைநீரை சேகரிப்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும், அனைவரும் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு அமைப்பினை உருவாக்கி, பருவமழை காலங்களில் மழைநீரை சேகரித்து வைக்க வேண்டும். மழைநீரை சேகரித்தால்தான் நம் எதிர்கால தலைமுறையினருக்கு நீரின் முக்கியத்துவம் உணர்த்த முடியும். மேலும், மழைநீரை சேகரிப்பதால் விவசாய பயன்பாட்டிற்கு தேவைப்படும் நீர்நிலைகள் உயரும். கோடைக்காலங்களில் மழைநீரின் தேவை இன்றியமையாததாக உள்ளது.
எனவே, பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், மழைநீர் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன மின்னணு திரையின் மூலம் விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கட்டாயமாக மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்கி, பராமரித்து மழைநீரை சேகரிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.இரா.மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.டி.சுரேஷ், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் திரு.தமிழ்ச்செல்வன் மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகப் பொறியாளர், உதவி பொறியாளர், உதவி நிலநீர் வல்லுநர் ஆகியோர் கலந்துகொண்டனர்.