4-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா (2 வெற்றி), பாகிஸ்தான் (ஒரு வெற்றி, ஒரு தோல்வி), ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான் (2 வெற்றி), வங்காளதேசம் (ஒரு வெற்றி, ஒரு தோல்வி) ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் சூப்பர்-4 சுற்றில் துபாயில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. இந்திய அணியில் காயமடைந்த ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டனர்.இந்த தொடரில் முதல்முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்திலேயே மிரண்டனர். தொடக்க ஆட்டக்காரர்கள் லிட்டான் தாஸ் (7 ரன்), நஸ்முல் ஹூசைன் (7ரன்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர்கள் கபளகரம் செய்தனர்.
இதன் பிறகு ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் சுழல் தாக்குதலில் வங்காளதேசத்துக்கு நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக ஓராண்டு இடைவெளிக்கு பிறகு ஒரு நாள் போட்டிக்கு அணிக்கு திரும்பிய ஜடேஜா அசத்தினார். அபாயகரமான பேட்ஸ்மேன்களான ஷகிப் அல்-ஹசன் (17 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (21 ரன்) இருவரும் ஜடேஜாவின் சுழலில் சிக்கினர். மக்முதுல்லா (25 ரன்), புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனதாக நடுவர் விரலை உயர்த்தினார். ஆனால் பந்து அவரது காலுறையில் படுவதற்கு முன்பாக பேட்டில் உரசியது ‘ரீப்ளே’யில் தெரிய வந்தது. இதை உணர்ந்திருந்த மக்முதுல்லா அப்பீல் செய்ய விரும்பினாலும், தங்களுக்குரிய டி.ஆர்.எஸ். வாய்ப்பை ஏற்கனவே பயன்படுத்தி இருந்ததால் வேறுவழியின்றி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
ஒரு கட்டத்தில் 101 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த வங்காளதேச அணி, 150 ரன்களையாவது தொடுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த சிக்கலான சூழலில் இணைந்த கேப்டன் மோர்தசாவும், மெஹிதி ஹசனும் அணியை சற்று கவுரவமான நிலைக்கு கொண்டு சென்றனர். புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்ட மோர்தசா (26 ரன், 32 பந்து) மீண்டும் ஒரு முறை விளாச முயற்சித்து கேட்ச் ஆனார். இவர்கள் 8-வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மெஹிதி ஹசன் 42 ரன்களில் (50 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். பந்து வீச்சில் அட்டகாசப்படுத்திய இந்தியா, பீல்டிங்கில் ஒரு சில கேட்ச்களை நழுவ விட்டது.முடிவில் வங்காளதேச அணி 49.1 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், பும்ரா, புவனேஷ்வர்குமார் தலா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். வங்காளதேசம் மொத்தம் 190 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் (டாட்பால்) விரயமாக்கியது கவனிக்கத்தக்க அம்சமாகும்.பின்னர் சுலபமான இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், கேப்டன் ரோகித் சர்மாவும் அருமையான தொடக்கத்தை உருவாக்கித் தந்தனர். தவான் 40 ரன்களில் (47 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த அம்பத்தி ராயுடு 13 ரன்னில் நடையை கட்டினார். இதைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் டோனி முன்வரிசையில் இறக்கப்பட்டார்.
மறுமுனையில் தனக்கே உரிய பாணியில் ரன்கள் சேகரித்த ரோகித் சர்மா சிக்சர் அடித்து தனது 36-வது அரைசதத்தை எட்டியதுடன், அணியின் ஸ்கோரையும் 100 ரன்களை கடக்க வைத்தார். இலக்கை நெருங்கிய சமயத்தில் டோனி 33 ரன்களில் (37 பந்து, 3 பவுண்டரி) கேட்ச் ஆனார்.இந்திய அணி 36.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 83 ரன்களுடனும் (104 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்திய அணி அடுத்து பாகிஸ்தானுடன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மோதுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா அணி!
Leave a comment