அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வு பெற்ற பிறகு அவருடன் பிரதமர் மோடி முதல்முறையாக அதிகாரப்பூர்வ ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்பு ‘குவாட்’ ஆகும்.
ராணுவ பாதுகாப்பு, கடல்வழி போக்குவரத்து, பொருளாதார உதவி உள்பட பல்வேறு விஷயங்களை இந்த 4 நாடுகளும் பகிர்ந்து கொள்ளும்.
முக்கியமாக கடற்படை போர் பயிற்சிகளை குவாட் நாடுகள் பலமுறை ஒன்றாக செய்துள்ளன. சீனாவுடன் மோதல் நிலவும் நிலையில் குவாட் கூட்டமைப்பு அதிமுக்கியத்துவம் பெறுகிறது.
இந்த நிலையில் குவாட் அமைப்பின் முதல் உச்சி மாநாடு வருகிற 12-ந்தேதி காணொலி மூலம் நடக்கிறது.
இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷின்டே சுகா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த நாட்டு தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். கடல் போக்குவரத்து, எல்லை பாதுகாப்பு, கொரோனா தடுப்புமருந்து, பொருளாதார மந்தநிலை குறித்து இவர்கள் விவாதிக்கிறார்கள்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வு பெற்ற பிறகு அவருடன் பிரதமர் மோடி முதல்முறையாக அதிகாரப்பூர்வ ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார்.
இதற்குமுன்பு இரண்டு முறை டெலிபோனில் தான் பேசி உள்ளார். இதில் ஒருமுறை அவர் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனால் குவாட் கூட்டத்தில் ஜோ பைடனுடன் மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இருவரும் தனித்தனி ஆலோசனையில் ஈடுபடுவார்களா? என்பது இதுவரை தெரியவில்லை.