பொதுமக்களிடம் கருத்து கேட்டு ரிஷிவந்தியம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என அ.தி.மு.க. வேட்பாளர் சந்தோஷ் உறுதியளித்தார்.
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் எஸ்.கே.டி.சி.ஏ.சந்தோஷ் நேற்று காலை ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட திருவரங்கம் கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளத்துடன் சந்தோசை வரவேற்றனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதைத்தொடர்ந்து அவர், ஜம்படை, சு.கள்ளிப்பாடி, சிறுபனையூர், பெரியமணியந்தல், சீர்ப்பனந்தல், கரையாம்பாளையம், எடுத்தனூர், இளையனார்குப்பம், பெரியகொள்ளியூர், கானாங்காடு, பாக்கம், கடுவனூர், தொழுவந்தாங்கல், அத்தியூர், அரியலூர், வாணாபுரம், ஓடியந்தல், கடம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீதி, வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், நான் வாக்கு கேட்டு செல்லும் இடங்களில் ஏராளமான மக்கள் அடிப்படை தேவை செய்ய கேட்டு மனு கொடுக்கிறார்கள். இது ரிஷிவந்தியம் தொகுதி வளர்ச்சி இல்லாத தொகுதி என காட்டுகிறது. எனவே என்னை வெற்றி பெற செய்தால், நான் பொதுமக்களாகிய உங்களிடம் கருத்து கேட்டு தொகுதிக்கு அடிப்படை வசதிககளை செய்து, ரிஷிவந்தியம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். பிரசாரத்தின்போது அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கதிர்.தண்டபாணி, துரைராஜ், அருணகிரி, திருக்கோவிலூ் ஒன்றிய செயலாளர் ஏ.பி.பழனி, பா.ம.க. மாநில துணைத்தலைவர் மணிகண்டன், அ.தி.மு.க. நிர்வாகிகள் கடம்பூர் முன்னாள் ஊராட்சி தலைவர் வைத்தியநாதன், திருவரங்கம் ராமச்சந்திரன், சாங்கியம் ஞானமுர்த்தி, சிவசங்கரன், முனிவாழை சேட்டு, அருதங்குடி விஜயகுமார், பா.ஜ.க. நிர்வாகி செந்தில்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். முன்னதாக மணியந்தல் கிராமத்தில் வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்த பெண்களிடம் சந்தோஷ் வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் வயலில் இறங்கி விவசாய பெண் தொழிலாளர்களுடன் சேர்ந்து நாற்று நட்டு வாக்கு சேகரித்தார்.