ஏழை மக்கள் முன்னேற்றத்துக்காக பிரதமர் மோடி 115 திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என மேற்குவங்காளத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரசாரம் செய்தார்.
மேற்குவங்காளத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் தெற்கு பர்ஹானா மாவட்டம் கோஷாபா என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-
கடந்த தேர்தலின் போது மம்தா பானர்ஜி 282 வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் அதில் 82 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை.
ஏழை மக்கள் முன்னேற்றத்துக்காக பிரதமர் மோடி 115 திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஆனால் இங்கு ஆட்சி வகிக்கும் மம்தா 115 முறைகேடுகளை செய்து இருக்கிறார்.
ஏழைகளுக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டங்களுக்காக சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு உதவிகளை செய்தது. அந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அது மக்களுக்கு சென்றடையவில்லை.
3 தடவை புயல் வீசி பாதிப்பு ஏற்பட்ட போது ஏராளமான உதவிகளை மத்திய அரசு செய்தது. அந்த பணமும் மக்களுக்கு சென்றடையவில்லை. சுந்தர வனக்காடுகளை மேம்படுத்த ரூ.1000 கோடி அனுப்பி வைத்தோம். அது என்ன ஆனது என்று தெரியவில்லை.
இந்த பணத்தை எல்லாம் மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொள்ளையடித்து இருக்கிறார்கள்.
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மம்தா ஆட்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும். இதன் மூலம் மம்தாவின் உறவினர்கள் ஜெயிலுக்கு செல்வார்கள்.
பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய மம்தாபானர்ஜிக்கு இந்த தேர்தலில் முற்றுப் புள்ளி வைப்போம்.