இந்தியாவில் இந்த ஆண்டு 2-வது ஆறு மாதத்தில் 200 கோடியில் இருந்து 250 கோடி டோஸ் மருந்து வரை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் கோவி ஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
முதலில் சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இத்துடன் 45 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு நோய் தாக்குலுக்கு ஆளானவர்களுக்கும் ஊசி போடப்பட்டது.
இப்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1-ந்தேதி தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் கூடுதலாக தடுப்பூசி மருந்துகள் தேவைப்படுகிறது.
மேலும் தற்போது நோய் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. எனவே தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு தேவையான மருந்துகள் இருப்பில் இல்லை. எனவே மருந்து தயாரிக்கும் 2 நிறுவனங்களையும் உற்பத்தியை அதிகரிக்கும்படி மத்திய அரசு கேட்டு உள்ளது.
மருந்து உற்பத்தியை கண்காணிக்க சுகாதாரத் துறை, மருந்து தயாரிப்புத் துறை, மருந்து கட்டுப்பாட்டு துறை, உயிரி தொழில்நுட்பத் துறை, இந்தோ மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆகிய வற்றைச் சேர்ந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
நேற்று கோவிஷீல்டு மருந்து தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர்பூன வல்லாவுடன் நிபுணர் குழு ஆலோசனை நடத்தியது.
அப்போது மருந்து தயாரிப்புக்கு தேவையான பல உதிரிப் பொருட்கள் அமெரிக்காவில் இருந்து வர வேண்டி உள்ளது. குறிப்பாக இதற்கான பைகள், அரிப்புகள், கண்ணாடிப் பொருட்கள், பாட்டில் தலைப்பகுதியில் பொருத்தப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட சில பொருட்கள் அமெரிக்காவில் இருந்து வர வேண்டி உள்ளது.
ஆனால் அமெரிக்கா இவற்றை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்து இருக்கிறது. எனவே அந்த பொருட்கள் தாராளமாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆதர் பூனவல்லா நிபுணர் குழுவிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இன்று நிபுணர்கள் குழு கோவேக்சின் மருந்து தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். அந்த நிறுவனம் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் இந்த ஆண்டு 2-வது ஆறு மாதத்தில் 200 கோடியில் இருந்து 250 கோடி டோஸ் மருந்து வரை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.