மணல் திட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வீரியபட்டியை சேர்ந்தவர் கதிரவன் (வயது 19). இதே ஊரை சேர்ந்தவர் விஜயகுமார்(24). நண்பர்களான இவர்கள் இருவரும் கரூரில் உள்ள தனியார் பஸ் பாடி கட்டும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் வீரியபட்டியிலிருந்து கொடைக்கானலுக்கு குஜிலியம்பாறை வழியாக சென்றனர்.
அப்போது குஜிலியம்பாறை பெட்ரோல் பங்க் அருகே சாலை விரிவாக்க பணிக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் திட்டின் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் மோட்டார்சைக்கிள் ஓட்டி வந்த கதிரவன் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் பின்னால் அமர்ந்திருந்த விஜயகுமாரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குஜிலியம்பாறை போலீசார் விரைந்து வந்து கதிரவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.