மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு வாய்ப்பு வழங்கினால், உண்மையான மாற்றம் எப்படி இருக்கும் என்பதை காட்டுவோம் என பிரதமர் மோடி பேசினார்.
சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் பிரதமர் மோடி ஏற்கனவே பிரசாரம் மேற்கொண்டார். தற்போது வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் அவர் மீண்டும் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். நேற்று முன்தினம் மேற்கு வங்காளம், அசாமில் பிரசாரம் செய்தார். மேற்கு வங்காளத்தில் புருலியாவிலும், அசாமில் கரிம்கஞ்சிலும் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மீண்டும் மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் பிரசாரம் செய்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார்.
மேற்கு வங்காளத்தில் உள்ள கர்காபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். தனது பிரசாரத்தின் போது அவர், மேற்கு வங்காள முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளால் ஏற்பட்ட அழிவுகளை நீங்கள் பார்த்துள்ளீர்கள். உங்களின் கனவுகளை (மேற்கு வங்காள மக்கள்) திரிணாமுல் காங்கிரஸ் நாசமாக்கிவிட்டது. கடந்த 70 ஆண்டுகளாக அனைவருக்கும் நீங்கள் வாய்ப்பு வழங்கிவிட்டீர்கள். ஆனால், அடுத்த 5 ஆண்டுகள் எங்களுக்கு (பாஜக) வாய்ப்பு தாருங்கள். கடந்த 70 ஆண்டுகளாக ஏற்பட்ட அழிவில் இருந்து மேற்குவங்காளத்தை நாங்கள் விடுதலை செய்கிறோம். இந்த நேரத்தில் நீங்கள் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு வழங்கினால், உண்மையான மாற்றம் எப்படி இருக்கும் என்பதை நாங்கள் காட்டுவோம்.
வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் நேற்று 50 முதல் 55 நிமிடங்கள் முடங்கியதால் அனைவரும் கவலைப்பட்டனர். ஆனால், மேற்கு வங்காளத்தில் கடந்த 50 – 55 ஆண்டுகளாக வளர்ச்சி மற்றும் கனவுகள் முடங்கியுள்ளன. முதலில் காங்கிரஸ், அடுத்து இடதுசாரிகள், தற்போது திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை மாநிலத்தின் வளர்ச்சியை
தடுத்தன.
இந்த வாரத்தில் மோடி மேற்கு வங்காளத்தில் மட்டும் 2-வது முறையாக பிரசாரம் செய்தார். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 5-வது முறையாக அங்கு பிரசாரம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தை முடித்து கொண்டபிறகு, மோடி அசாம் மாநிலத்துக்கு சென்றார். அங்குள்ள சவுபா பகுதியில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.