குன்னூரில் கோவில் பின்புறம் பள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த காட்சி நீலகிரி மாவட்டம் குன்னூரில் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வீடியோவில் உள்ள கோவில் எங்கள் பகுதியை சேர்ந்தது என்றும், மாணவி அணிந்திருந்த சீருடை இங்குள்ள ஒரு பள்ளி சீருடை என்றும் குன்னூர் போலீசில் புகார் செய்தனர்.
வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். சீருடைக்கு உரிய பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள ஆசிரியர்களிடம் மாணவியின் வீடியோவை காட்டி கேட்டபோது ஒரு வருடத்துக்கு முன்பு தங்கள் பள்ளியில் இந்த மாணவி 10-ம் வகுப்பு படித்ததாகவும், அதன்பின்னர் அவர் பள்ளிக்கு வருவதில்லை என்றும் கூறினர். மேற்கொண்டு மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து தாலிகட்டிய வாலிபர் குறித்து விசாரித்தபோது அவர் குன்னூர் கொலக்கம்பை சட்டன் பகுதியில் உள்ள கிளிஞ்சடா பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 23) என்பது தெரியவந்தது.
அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது:-
நானும், பள்ளி மாணவியும் காதலித்து வந்தோம். காதலுக்கு மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் காதலை பிரித்து விடுவார்களோ என்று அச்சம் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவியிடம் இது குறித்து கூறி திருமணம் செய்து கொள்ளலாம். அதன்பின்னர் நம்மை பிரிக்க முடியாது என்று கூறினேன். இதற்கு மாணவி சம்மதித்தார். மகிழ்ச்சியடைந்த நான் இது குறித்து எனது நண்பர்களிடம் கூறினேன். அவர்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறினர்.
இதனையடுத்து ஒரு நல்ல நாளில் கோவிலில் மங்கள இசை முழங்கியது. அப்போது மாணவி பள்ளி செல்வதாக கூறிவிட்டு சீருடையுடன் கோவிலுக்கு வந்தார். கோவில் பின்புறம் மாணவியை நிற்க வைத்து மஞ்சள் கயிறை கட்டினேன்.
மாணவியும் அலைபாயுதே பாணியிலேயே தாலியை மறைத்து வீட்டில் சமாளித்து வந்தார். ஒரு கட்டத்தில் மாணவியின் நடவடிக்கையை கண்ட பெற்றோர் அவரை கண்காணிக்க தொடங்கினர். ஒரு நாள் மாணவியின் கழுத்தில் தாலி கிடப்பதை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் அவர்களது குடும்பத்தில் பெரும் பிரச்சனை எழுந்தது. இதனையடுத்து நான் கட்டிய தாலியை பெற்றோர் கழற்றி எறிந்து விட்டு மாணவியை திருச்செங்கோட்டுக்கு அழைத்துச்சென்று விட்டனர். அவர்கள் சென்று ஒரு வருடம் ஆகிறது. மாணவி குறித்து வேறு எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. ஒரு வருடத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோவை எனது நண்பர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி தான் சிக்கிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்டோபரை போலீசார் கைது செய்தனர். மாணவியை கண்டு பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.