மாநிலங்களவை எதிர்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்றார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் மக்களவை, மாநிலங்களவை கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இந்த உரையை விவசாயிகள் போராட்டத்தை காரணம் காட்டி 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
பிப்ரவரி 1-ந் தேதி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2021-22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் நடத்தி வருகிற போராட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் மீது தனி விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி 4 நாட்கள் நடந்த தொடர் அமளியால் சபை முடங்கியது.
முதல் அமர்வுக்கு பின்னர் மாநிலங்களவை பிப்ரவரி மாதம் 12-ந் தேதியும், மக்களவை 13-ந் தேதியும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில் பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வுக்காக பாராளுமன்றம் இன்று கூடியது.
குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றனர். மாநிலங்களவை எதிர்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்றார்.
எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்தார்.
கருக்கலைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.