இந்திய நீதித்துறை செயல்பாடுகள் இப்படி தான் இருக்கிறது என கூறி புகைப்படம் ஒன்று சோக கதையுடன் வைரலாகி வருகிறது.
ஆண்கள் குழுவாக நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் 122 பேரும் 20 ஆண்டுகள் சிறையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இவர்கள் அனைவரும் இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாக வைரல் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
`செய்யாத குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை. சூரத் பகுதியை சேர்ந்த 122 முஸ்லீம் ஆண்கள் இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாக கூறி குஜராத் நீதிமன்றம் 2001 ஆம் ஆண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இவர்கள் இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்ததை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் சமர்பிக்கப்படவே இல்லை. உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தில் நீதித்துறை செயல்பாடுகள் இப்படி தான் இருக்கின்றன.’ எனும் தலைப்பில் வைரல் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
புகைப்படத்தை ஆய்வு செய்ததில், 2001 ஆம் ஆண்டு துவங்கிய சட்ட போராட்டத்தில், போதுமான ஆதாரங்கள் இல்லாததால் 122 பேரையும் சூரத் நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்து இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், இவர்கள் அனைவரும் 20 ஆண்டுகளை சிறையில் கழிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. கைதான சில மாதங்களில் இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கத்துடன் 122 பேருக்கும் தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் சமர்பிக்கப்படாத காரணத்தால், அனைவரையும் விடுவிப்பதாக சூரத் நீதிமன்றம் மார்ச் 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், தீர்ப்பு வழங்க 20 ஆண்டுகள் ஆகியுள்ள காரணத்தால் புகைப்படம் வைரலாகி வருகிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.