அஜ்மானில் கொரோனா பரிசோதனை செய்யவும், தடுப்பூசி போட்டு கொள்வதற்கும் புதிய நடமாடும் மருத்துவ நிலையத்தை அஜ்மான் போலீஸ் தலைவர் தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து பொதுமக்கள் எளிதில் கொரோனா பரிசோதனை செய்வதற்கும், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு வசதியாகவும் நடமாடும் மருத்துவ நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, தேசிய அவசர சேவை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், அமீரக சுகாதாரம் மற்றும் தடுப்புத்துறை அமைச்சகம் மற்றும் ஷேக்கா பாத்திமா பிந்த் முபாரக் தன்னார்வ திட்டம் ஆகியவை இணைந்து அஜ்மானில் புதிதாக நடமாடும் மருத்துவ நிலையத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடமாடும் மருத்துவ நிலையத்தை, நேற்று அஜ்மான் போலீஸ் தலைவரும், அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஷேக் சுல்தான் பின் அப்துல்லா அல் நுயைமி தொடங்கி வைத்தார். பின்னர் அவற்றில் உள்ள வசதிகள் குறித்து பார்வையிட்ட அவர் கூறியதாவது:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்த வசதியாக அஜ்மானில் ஏற்கனவே தற்காலிக ஆஸ்பத்திரியை அஜ்மான் பட்டத்து இளவரசர் ஷேக் அம்மார் பின் ஹுமைத் அல் நுயைமி தொடங்கி வைத்தார். தற்போது இந்த நடமாடும் மருத்துவ நிலையம் மூலம், பொதுமக்கள் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இந்த பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர். சர்வதேச தரத்துக்கு இணையான வகையில் சேவைகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மையத்துக்கு காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பரிசோதனைகளை செய்து கொள்வதுடன், தடுப்பூசிகளையும் போட்டு செல்கின்றனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த நடமாடும் மருத்துவ நிலையம் மிகவும் உதவியாக இருக்கும். அஜ்மான் பகுதியில் மட்டும் 19 நடமாடும் மருத்துவ நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தொடக்க விழாவில் அஜ்மான் மருத்துவத் துறையின் இயக்குனர் ஹமத் தரிம் அல் சம்சி மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.