புதுவையில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மாநில செயலாளர் வி.பி.பி.வேலு தெரிவித்துள்ளார்.
புதுவை சட்டசபைக்கு வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
புதுவையில் காங்கிரஸ்-தி.மு.க. ஒரு அணியாகவும், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. மற்றொரு அணியாகவும் களமிறங்க உள்ளது.
இக்கூட்டணியில் என்.ஆர்.காங்கிரசுக்கு 16 இடங்களும், அ.தி.மு.க.- பா.ஜனதாவுக்கு 14 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதால் அக்கட்சி கடும் அதிருப்தியில் உள்ளது.
அதிக தொகுதிகளை கேட்கவேண்டும் என அக்கட்சி தலைமையை வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டிலும் இழுபறி நீடித்து வருகிறது. தி.மு.க. 15 தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகிறது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்று வருகிறது. புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா, எஸ்.பி.சிவக்குமார், நாஜிம் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோரும் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைவான தொகுதிகளை ஒதுக்கியதால் தே.மு.தி.க. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது. அ.ம.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுவையில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மாநில செயலாளர் வி.பி.பி.வேலு தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமை ஒப்புதலை பெற்று இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் 5 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பாகூரில் வி.பி.பி.வேலு, காலாப்பட்டில் ஹரிகரன், உப்பளத்தில் சசிக்குமார், திருநாள்ளாறில் ஜிந்தா என்கிற குரு, நெடுங்காடு கோட்டூச்சேரியில் ராம்டீ ஞானசேகர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.