இந்த ஆட்சியாளர்களுக்கு தமிழ்மொழி சிதைந்து அழிவது குறித்தோ, தமிழர்களின் வரலாறு மறைக்கப்படுவது குறித்தோ, தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம் சிதைந்து அழிவது குறித்தோ, நிலவளம் சுரண்டப்படுவது குறித்தோ கவலை கிடையாது.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆண்டிப்பட்டி, போடி, பெரியகுளம், ஆகிய இடங்களில் நேற்று பிரசாரம் செய்தார். போடி வள்ளுவர் சிலை முன்பு திரண்டிருந்த மக்கள் மத்தியில் சீமான் பேசியதாவது:-
மக்களுக்கு எது அடிப்படையான தேவை, எதை கொடுத்தால் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்ற சிந்தனையே இல்லாதவர்களிடத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சி, அதிகாரம் சிக்கிக்கொண்டுள்ளது.
இந்த ஆட்சியாளர்களுக்கு தமிழ்மொழி சிதைந்து அழிவது குறித்தோ, தமிழர்களின் வரலாறு மறைக்கப்படுவது குறித்தோ, தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம் சிதைந்து அழிவது குறித்தோ, நிலவளம் சுரண்டப்படுவது குறித்தோ, மலை வளம் களவு போவது குறித்தோ கவலை கிடையாது.
அவர்களுக்கு இருக்கும் ஒரே நோக்கம் பணம். அரசியலுக்கு வருவது, பதவிக்கு வருவது, பணம் சம்பாதிப்பது, பணத்தை பதுக்கி வைத்து தேர்தல் வரும்போது வாக்குக்கு காசு கொடுத்து வாக்கை விலைக்கு வாங்குவது என்பதாக உள்ளது. அதைக் கொண்டு மறுபடியும் ஆட்சிக்கு வருவது, கொள்ளையடிப்பது என 50 ஆண்டுகளாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதற்கு துணையாக தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளன.
நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ அ.தி.மு.க., தி.மு.க.விடம் இருந்து விடுதலை பெற வேண்டும். இந்த இரு கட்சிகளும் தற்போது தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளை கொடுத்துள்ளது.
50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சியில் இருந்தபோதும் செய்யாததையா இப்போது செய்யப்போகிறார்கள்? தேர்தல் நேரம் என்பதால் இனிப்பான வார்த்தைகளை கூறி ஏமாற்றப் பார்க்கிறார்கள்.
வாக்குக்கு காசு கொடுப்பவர்கள் பெரிய ஜமீன்கள், திவான்கள் இல்லை. மக்களிடம் திருடிய பணத்தை வாக்குக்கு கொடுக்கிறார்கள். எங்களிடம் பணம் இல்லை. ஆனால் தூய உள்ளத்தோடு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த மனம் இருக்கிறது. அவர்கள் கோடிகளை கொடுக்கிறார்கள்.
நாங்கள் உயர்ந்த கொள்கைகளை கொடுக்கிறோம். எது வேண்டுமென்று முடிவு செய்யுங்கள். பணமா? தமிழர் என்ற இனமா?. நாம் தமிழர் வேட்பாளர்களின் வெற்றி எங்கள் கட்சியின் வெற்றியல்ல. நம் இனத்தின் வெற்றி. எங்கள் வேட்பாளர்கள் வெல்வது என்பது நம் இன வரலாற்றில் ஒரு மாபெரும் புரட்சி.