புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் கதிர் அறுக்கும் எந்திரம் மீது தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் அந்த பஸ் திருச்சியை அடுத்த புதுக்கோட்டை மாவட்ட தொடக்கமான கீரனூரை அருகேயுள்ள பொம்மாடிமலை பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த கதிர் அறுக்கும் எந்திர வாகனம் மீது ஆம்னி பஸ் உரசியது. இதனால் நிலை குலைந்த பஸ் சாலையின் இருபுறமும் தாறுமாறாக ஓடியது. இதில் பஸ்சில் பயணம் செய்தவர்கள் அச்சத்தில் அலறினர். பஸ்சை நிறுத்த டிரைவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இறுதியில் அந்த பஸ் சாலையின் நடுவில் கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் உள்பட அனைவரும் ஐயோ அம்மா என்று இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர்.
இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாளையங்கோட்டை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் வெங்கடேஷ் (23), ராமநாதபுரத்தை சேர்ந்த அருண்பாண்டியன் மனைவி சரண்யா (26) ஆகியோர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்
இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததோடு, விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். காயம் அடைந்த 29 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான கதிர் அறுக்கும் வாகனத்தை பறிமுதல் செய்து, தலைமறைவான அதன் டிரைவரை தேடி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்தை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை நடத்தினார்.