புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நேற்று டெல்லி எல்லைகளில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்தினர்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இதற்காக சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லி எல்லைகளில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் விவசாயிகளுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி விவசாயிகளின் இந்த போராட்டக்களங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் பெண் விவசாயிகள் குவிந்து போராட்டத்தை வழிநடத்தினர்.
குறிப்பாக விவசாயிகளின் போராட்ட மேடைகளை நிர்வகித்தல், பெண் பேச்சாளர்களை கொண்டு பெண்களுக்கு ஆதரவாகவும், விவசாய சட்டங்களை எதிர்த்தும் உரையாற்றுதல், போராட்டக்காரர்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குதல், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுதல் என அனைத்து பணிகளையும் நேற்று பெண்களே மேற்கொண்டனர்.
இதைப்போல சிங்கு உள்ளிட்ட போராட்டக்களங்களில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற பேரணியும் நடந்தது. இந்த நிகழ்வுகளால் போராட்டக்களங்களில் நேற்று ஆயிரக்கணக்கான பெண்களை காண முடிந்தது.
இவ்வாறு விவசாயிகளின் போராட்டக்களத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றதை தொடர்ந்து, போராட்டத்தில் பெண் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக விவசாய தலைவர்கள் கூறியுள்ளனர்.