7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது.
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் ஏ.டி.கே. மோகன் பகான்- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) இடையிலான அரைஇறுதியின் முதலாவது சுற்று 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் அரைஇறுதியின் 2-வது சுற்றில் நேற்றிரவு மல்லுகட்டின.
வெற்றி பெறும் அணிக்கு இறுதி வாய்ப்பு என்பதால் இரு அணி வீரர்களும் தொடக்கத்தில் இருந்தே ஆக்ரோஷமாக ஆடினர். இருப்பினும் முன்னாள் சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகானின் ஆதிக்கமே சற்று ஓங்கியது. 38-வது நிமிடத்தில் டேவிட் வில்லியம்ஸ் கோல் அடித்து ஏ.டி.கே. அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தி தந்தார். 68-வது நிமிடத்தில் மற்றொரு ஏ.டி.கே. வீரர் மன்விர் சிங் இரு பின்கள வீரர்களை லாவகமாக ஏமாற்றி சூப்பராக கோல் போட்டார். பதிலடி கொடுக்க போராடிய கவுகாத்தி அணி 74-வது நிமிடத்தில் கோல் திருப்பியது. கோல் கீப்பர் தடுத்து திரும்பி வந்த பந்தை அந்த அணியின் சுஹைர் தலையால் முட்டி கோலாக்கினார். 81-வது நிமிடத்தில் கவுகாத்தி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. ஆனால் கவுகாத்தி அணியின் லூயிஸ் மச்சடோ பந்தை கோல் கம்பத்திற்கு வெளியே அடித்து வீணாக்கி விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி இருந்தால் ஆட்டத்தில் நீயா-நானா? என்ற இழுபறி நிலை உருவாகியிருக்கும். முடிவில் ஏ.டி.கே. மோகன் பகான் 2-1 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தியது. முதலாவது ஆட்டத்தின் முடிவையும் சேர்த்து ஏ.டி.கே. மோகன் பகான் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.
வருகிற 13-ந்தேதி இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் இறுதி ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் அணி, மும்பை சிட்டி எப்.சி.-யை எதிர்கொள்கிறது.