சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்றது. 2-வது கட்டமாக 60 வயதை எட்டிய அனைவருக்கும், இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கும் கடந்த திங்கட்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர் மோடி தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதேபோல் தடுப்பூசி போடுவதில் பொதுமக்களிடையே உள்ள தயக்கம் மற்றும் அச்ச உணர்வை போக்குவதற்காக பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதன் பின்னர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்.