டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கேரள மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளருமான தாரிக்அன்வருடன் கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
கேரள சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 90 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது.
ஒவ்வொரு தொகுதியிலும் விருப்ப மனு கொடுத்தவர்களில் 3 பேரின் பெயர்களை மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்வு செய்தனர். இந்த பட்டியலுடன் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ்சென்னிதலா ஆகியோர் டெல்லி சென்றனர்.
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கேரள மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளருமான தாரிக்அன்வருடன் கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இதில் கேரளாவில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இந்த ஆலோசனை விடிய விடிய நடந்தது. என்றாலும் கேரளாவின் நேமம், வட்டியூர்காவு உள்ளிட்ட சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை டெல்லியில் முகாமிட்டுள்ள மூத்த தலைவர்கள் இறுதி செய்துள்ளனர்.
இந்த பட்டியல் இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.