கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவையொட்டி வருகிற 25-ந் தேதி தேரோட்டமும், 26-ந் தேதி 63 நாயன்மார்கள் வீதி உலாவும் நடக்கிறது.
விழாவில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை அதிகார நந்தி காட்சி, 23-ந்தேதி இரவு வெள்ளி ரிஷப வாகன வீதி உலா நடக்கிறது. 25-ந்தேதி (வியாழக்கிழமை) காலை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.
26-ந்தேதி மதியம் 63 நாயன்மார்கள் வீதி உலாவும், 28-ந் தேதி இரவு திருக்கல்யாணமும் நடக்க உள்ளது. பங்குனி திருவிழா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கோவில் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அவ்வப்போது சுகாதார பணியாளர்களை கொண்டு தூய்மை பணிகள் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கர்ப்பிணிகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருக்கல்யாண உற்சவத்தை காண இரண்டு பெரிய திரை கோவிலுக்கு வெளியே பொருத்தப்பட்டு ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பங்குனி பெருவிழாவின் முக்கிய திருவிழாவான அதிகார நந்தி காட்சி, வெள்ளி ரிஷப வாகன காட்சி, தேரோட்டம், 63 நாயன்மார்கள் வீதிஉலா மற்றும் திருக்கல்யாண உற்சவம் ஆகியவைகளை ‘யூடியூப்’ மூலம் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளதால் பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே சாமியை தரிசித்து அருள்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்கள் கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.