பலுசிஸ்தான் மாகாணத்தில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தொடர் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்கக்கோரி ‘பலுசிஸ்தான் விடுதலை இயக்கம்’ என்கிற அமைப்பு பல ஆண்டுகளாக அந்த நாட்டு ராணுவத்துடன் ஆயுத மோதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்த அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி அங்கு பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் காலூன்றி வருகின்றன.
இவர்கள் பலுசிஸ்தான் மாகாணத்தில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தொடர் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தின் துறைமுக நகரமான குவாடரில் நேற்று காலை பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான வாகனங்கள் சாலையில் அணிவகுத்து சென்றன.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் கடற்படை வாகனம் ஒன்றின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. என்ன நடக்கிறது என கடற்படை வீரர்கள் சுதாரிப்பதற்குள் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் கடற்படை வீரர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதனிடையே தாக்குதல் நடந்த பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.