ஓசூர் அருகே யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம், கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு மற்றும் போடூர்பள்ளம் ஆகிய வனப்பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளன.
தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் உணவு, தண்ணீரை தேடி காட்டு யானைகள் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த யானைகள், தனித்தனியாகவும், கூட்டமாகவும் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் பீதி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ஓசூர் அருகே தொரப்பள்ளி பக்கமுள்ள திருச்சிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜப்பா (60) என்ற விவசாயி இன்று அதிகாலையில் வீட்டைவிட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த ஒற்றை யானை திடீரென அவரை துரத்திச் சென்று, கால்களால் மிதித்தது இதில், ராஜப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், அந்த யானை மீண்டும் காட்டுக்குள் சென்று பதுங்கி விட்டது. இறந்துபோன ராஜப்பாவிற்கு, பாப்பம்மா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம், கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.