கோவை மாநகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், தினசரி மாவட்டம் முழுவதும் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
கோவை மாநகரில் ஒண்டிப்புதூர், கணபதி, சரவணம்பட்டி, காளப்பட்டி, பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் கொரேனா பரவல் இன்னும் உள்ளது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், கோவை மாநகராட்சி, சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வருபவர்களுக்கு இ-பாஸ், கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
கோவை மாநகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
பறக்கும் படையினர் பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், வணிக வளாகங்கள் ஆகிய பகுதிகளுக்கு சென்று சமூக இடைவெளியை கடைபிடிக்காத , முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
கோவை மாநகர பகுதியில் நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தவர்களுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காலத்தில் இருந்து இதுவரை கோவை மாநகராட்சி பகுதியில் மட்டும் ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர்கள் கூறியதாவது:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஆய்வு செய்து முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200, சமூக இடைவெளியை பின் பற்றாதவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடை உரிமையாளர்கள் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள், விற்பனை செய்பவர்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி படுத்த வேண்டும். பொதுமக்களும் பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.