மரபணு மாறிய புதிய வகை வைரஸ் குறித்த ஆய்வு தகவல் விரைவில் வெளியிடப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்பின்னர், பிரிட்டன், பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரசானது, முந்தைய வைரசை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுடன் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:-
வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் இந்தியா திரும்பிய பயணிகளை பரிசோதனை செய்ததில், மரபணு மாறிய புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்களில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மரபணு மாறிய புதிய வகை வைரஸ் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆய்வுத் தகவல் விரைவில் வெளியிடப்படும்
10,787 சாம்பிள்களை சோதனை செய்ததில், 736 பேருக்கு பிரிட்டனில் உருவான வைரஸ் பாதிப்பும், 34 பேருக்கு தென் ஆப்பிரிக்காவில் உருவான வைரசும், ஒருவருக்கு பிரேசிலில் உருவான மரபணு மாறிய வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இந்த புதிய வகை வைரஸ் பாதிப்புக்கும் உள்நாட்டில் புதிய தொற்றுகள் அதிகரிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை.