கொடைக்கானலில் ஓட்டலில் சாப்பிட்டு பில் தர மறுத்து ரகளையில் ஈடுபட்ட தி.மு.க.வினர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானல் கே.ஆர்.ஆர் கலையரங்கம் பகுதியில் நகராட்சி கட்டுபாட்டில் வாகன நிறுத்தும் இடம் உள்ளது. இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில் பழனியில் தி.மு.க. சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கொடைக்கானல் மற்றும் மேல்மலை கிராமப்பகுதியில் இருந்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் சென்று வந்தனர். கலையரங்கம் பகுதியில் கணேசன் என்பவர் உணவு விடுதி நடத்தி வருகிறார். இந்த உணவு விடுதியில் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு சென்று வந்த மேல்மலை கிராமத்தை சேர்ந்த 7 தி.மு.க.வினர் சாப்பிட வந்தனர். குடிபோதையில் இருந்த அவர்கள் அசைவ உணவுகளை சாப்பிட்டனர். அதன் பின் அவர்கள் சாப்பிட்ட உணவுக்கு ரூ.1,060 பில் தரப்பட்டது. ஆனால் அவர்கள் ரூ.460 மட்டுமே தந்துள்ளனர்.
இது குறித்து ஊழியர்கள் மீதி பணத்தை செலுத்துமாறு தெரிவித்த போது அவர்கள் உணவு குறைந்த அளவில் தாங்கள் உண்டதாகவும், நாங்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்றும் கூறி எங்களிடமே பணம் கேட்கிறாயா? நாங்கள் நினைத்தால் இந்த கடை இருக்காது என கூறி தகராறு செய்தனர்.
இதனை அங்கிருந்த மற்ற ஊழியர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மேலும் இது குறித்து போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.