மம்தா பானர்ஜிதான், போலீஸ் மந்திரி. அவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதா, காங்கிரஸ் கூறியுள்ளது
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து பா.ஜனதா பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மம்தா பானர்ஜி இந்த தாக்குதலுக்கு நந்திகிராம் மக்கள் மீது பழி சுமத்தி உள்ளார். அதனால் நந்திகிராம் மக்கள் அவர் மீது கோபமாக உள்ளனர். நேரில் பார்த்தவர்கள் கூறியபடி பார்த்தால், இது ஒரு விபத்துதான். மம்தா பானர்ஜி தனது காலை காருக்கு வெளியே வைத்திருந்தபோது, டிரைவர் காரை நகர்த்தி விட்டார். இதுதான் நடந்தது. அவரை யாரோ தள்ளிவிட்டனர் என்று நாடகம் ஆடுவதை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் மம்தாவை விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-
அனுதாபம் பெறுவதற்காக இதுபோன்ற தந்திரங்கள் செய்வது இந்த தடவை எடுபடாது. இதை சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்ப வேண்டும். மம்தா பானர்ஜிதான், போலீஸ் மந்திரி. அவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், அவர் உடனே பதவி விலக வேண்டும்.