இந்தியா – தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 4 போட்டிகளில் ஏற்கனவே தென்ஆப்பிரிக்கா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி லக்னோவில் இன்று காலை 9 மணிக்கு துவங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ப்ரியா புனியா மற்றும் ஸ்மிரிதி மந்தனா இருவரும் தலா 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹர்மன்ப்ரீத் கவுர் 55 பந்துகளில் 30 ரன்கள் அடித்த நிலையில், காயம் காரணமாக வெளியேறினார்.
கேப்டன் மிதாலி ராஜ் அரைசதத்தைக் கடந்து நம்பிக்கையளித்து வந்தார். எனினும் மற்ற வீராங்கனைகளிடமிருந்து ஒத்துழைப்பு இல்லாததால் இந்திய அணி 49.3 ஓவர்களில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிதாலி ராஜ்(79 ரன்கள்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து 189 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே தென்ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறியது. இருப்பினும் மிக்னான் டு பிரீஸ்(57)-அனி போஷ்(58) ஜோடி நிலைத்து நிதானமாக ஆடி தென்ஆப்பிரிக்க அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தது.
இறுதியில் தென்ஆப்பிரிக்க அணி 48.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை ஏற்கெனவே வென்ற தென் ஆப்பிரிக்க, இன்றைய வெற்றியின் மூலம் 4-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது.