கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருப்பதற்காகவும், கடன் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காகவும் வெல்டிங் பட்டறை உரிமையாளர் நடத்திய கடத்தல் நாடகம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 15-ந்தேதி இரவு வழக்கம் போல் வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய அவர் வெகு நேரமாகியும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் திசையன்விளை போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடினர். அப்போது திசையன்விளை-ஆனைகுடி விலக்கு சாலையில் அவரது மோட்டார் சைக்கிள், சுவீட் பாக்ஸ் மற்றும் ரத்தக்கறை கிடந்தது.
இதனால் அவரை யாரேனும் கடத்தி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை சோதனை செய்தனர்.
அதில் அவர் வழக்கமாக வீட்டிற்கு செல்லும் பாதையை தவிர்த்து வேறு பாதையில் சென்றது தெரிய வந்தது. மேலும் அவரது செல்போன் சிக்னலையும் வைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று அவரது செல்போன் சிக்னல் ஆனைகுடி பகுதியில் காட்டியது. அதனை வைத்து போலீசார் தேடியபோது நேற்று நள்ளிரவு அப்பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டில் அவர் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன.
தூத்துக்குடியை சேர்ந்த 32 வயது பெண் ஒருவருக்கு திசையன்விளையை சேர்ந்த ஒருவருடன் திருமணமானது. பின்னர் அந்த பெண் கடந்த ஒரு வருடமாக கணவரை விட்டு பிரிந்து கரைசுத்து புதூரில் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது சுரேசுக்கு அந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்துள்ளனர். இதனால் இருவரும் வேறு எங்காவது சென்று வாழ்க்கை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே சுரேசுக்கு ரூ.18 லட்சம் கடன் இருந்துள்ளது. அதில் இருந்தும் தப்பிப்பதற்காக அவர் முடிவு செய்து கடத்தல் நாடகம் நடத்த முயன்றுள்ளனர்.
இதற்காக கடந்த 15-ந்தேதி அவர் தனது வீட்டிற்கு போன் செய்து தனக்கு வரவேண்டிய பணம் ரூ.2 லட்சம் வந்து விட்டதாகவும், சுவீட் வாங்கி விட்டு பணத்துடன் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாகவும் கூறி உள்ளார்.
அப்போது தான் பணம் தன்னிடம் இருப்பதை அறிந்த சிலர் அவரை கடத்தி சென்று இருப்பார்கள் என அவரது பெற்றோர் நம்புவார்கள் என்று சுரேஷ் பொய் கூறி உள்ளார்.
பின்னர் மோட்டார் சைக்கிளை அப்பகுதியில் போட்டுவிட்டு காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டார். அங்கிருந்து நள்ளிரவில் தனது கள்ளக்காதலியின் வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
மேலும் அவரது கடத்தல் நாடகத்தை போலீசார் நம்பும் வகையில் ஆனைக்குடி விலக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளை விட்டு சென்ற இடத்தில் புறா ஒன்றின் கழுத்தை அறுத்து அதன் ரத்தத்தை அந்த பகுதியில் கொட்டி உள்ளார்.
அப்போது தான் தன்னை யாரோ அடித்து கடத்தி சென்று விட்டார்கள் என போலீசார் நம்புவார்கள் என நினைத்து அவர் இவ்வாறு செய்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருப்பதற்காகவும், கடன் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காகவும் வெல்டிங் பட்டறை உரிமையாளர் நடத்திய நாடகம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.