ரியல்மி நிறுவனத்தின் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் 108 எம்பி கேமரா கொண்ட புது ஸ்மார்ட்போனை மார்ச் 24 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. முன்னதாக மார்ச் 23 ஆம் தேதி ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
புதிய 108 எம்பி கேமரா ஸ்மார்ட்போனிற்கான டீசரை ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் வெளியிட்டார். டீசர் வீடியோவில் இரண்டு ஸ்போர்ட்ஸ் கார்கள் இன்பினிட்டி டிசைன் உருவாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. டீசர் வீடியோவில் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
எனினும், தற்போதைய தகவல்களின் படி ரியல்மி 8 சீரிஸ் மாடல்கள் மார்ச் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படகிறது. புது சீரிஸ் ரியல்மி 8 மற்றும் ரியல்மி 8 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இரு மாடல்களுக்கான முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
முந்தைய டீசர்களில் ஸ்டான்டர்டு மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. அதன்படி ப்ரோ வேரியண்ட் 108 எம்பி கேமரா கொண்டிருக்கும். இதுதவிர இரண்டு மாடல்களிலும் மொத்தம் நான்கு கேமரா செட்டப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் சார்ஜிங் வசதிகளை கொண்டிருக்கலாம்.