பா.ஜனதா சார்பில் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் நெல்லை தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. நெல்லை தொகுதியில் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வதற்கு உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நேற்று மதியம் 12-10 மணிக்கு பா.ஜனதா மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தனது மகன் விஜயுடன் காரில் நெல்லை உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் பா.ஜனதா சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது அவருடன் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் யாரும் வரவில்லை.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் நெல்லை தொகுதியில் 5-வது முறையாக போட்டியிடுகிறேன். நெல்லைக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவர பாடுபட்டு உள்ளேன். தொடர்ந்து பாடுபடுவேன். நெல்லை தொகுதி மக்கள் ஆதரவுடன் மீண்டும் வெற்றி பெறுவேன். இன்று நல்ல நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளேன். வேட்பாளர் பட்டியல் விரைவில் வந்துவிடும்’ என்றார்.
பா.ஜனதா சார்பில் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.