பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்கும்படி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்படுகிறது.
இன்றும் இந்த விவகாரம் எதிரொலித்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்கும்படி எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இரு அவைகளிலும் வலியுறுத்தினர். இதற்கு அனுமதி அளிக்கப்படாததால் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அடுத்தடுத்து அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. எனினும் உறுப்பினர்களின் அமளி நீடித்ததால், பாராளுமன்ற இரு அவைகளும் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
75வது சுதந்திர கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்களவையில் பிரதமர் மோடி அறிக்கை வெளியிட்டு உரையாற்ற விரும்பியதாகவும், அவையில் ஒருமித்த கருத்து இல்லாததால் அவர் இப்போது உரையாற்ற மாட்டார் என்றும் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரல்ஹாத் ஜோஷி கூறினார். ஒருமித்த கருத்து ஏற்பட்டதும் பிரதமர் உரையாற்றுவார் என்றும் அவர் கூறினார்.