இந்தியாவில் 10 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்தியாவில் 10 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
நேற்று போல் இன்று இல்லை என்று சொல்கிற நிலையை கொரோனா பரவலில் பார்க்க முடிகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகப்போகிறதோ என்ற அச்சமும், பீதியும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரத்து 846 பேருக்கு கொரோனா தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் நிறையத்தொடங்கி இருக்கின்றன.
இப்படி தொடர்ந்து கொரோனா வைரஸ் வெறியாட்டம் போடத்தொடங்கி இருப்பது, இந்தியா அந்த வைரசின் இரண்டாவது அலையை நோக்கி செல்கிறதா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.
நேற்று கிட்டத்தட்ட 44 ஆயிரம் பேருக்கு கொரோனா தாக்கி இருப்பது கடந்த 115 நாட்களில் அதிகபட்ச எண்ணிக்கை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
மராட்டிய மாநிலத்தில் மட்டுமே 27 ஆயிரத்து 126 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகி இருப்பது அந்த மக்களை பீதியில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்தியாவில் இந்த வைரசின் பிடியில் சிக்கியோர் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சத்து 99 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த 22 ஆயிரத்து 956 பேர் குணம் அடைந்து, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி நேற்று வீடு திரும்பினர். மராட்டியத்தில் 13 ஆயிரத்து 588 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 95.96 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவின் ஆதிக்கத்தில் இருந்து மீள முடியாத நிலையில் 197 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இது கடந்த 97 நாட்களில் அதிகபட்ச எண்ணிக்கை என்பது பதிவு செய்யத்தக்கது.
இதுவரை நாட்டில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 755 பேர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர்.
நேற்று உயிரிழந்த 197 பேரில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் 92 பேர் ஆவார்கள். அதே நேரத்தில் அந்தமான் நிகோபார், அருணாச்சல பிரதேசம், அசாம், தத்ராநகர் ஹவேலி டாமன்தியு, கோவா, ஜார்கண்ட், லடாக், லட்சத்தீவு, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, ஒடிசா, புதுச்சேரி, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்பு ஒன்றுகூட இல்லை என்பது ஆறுதல் அளிக்கும் தகவல் ஆகும்.
கொரோனாவில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று தொடர்ந்து 11-வது நாளாக அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 9 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 2.66 சதவீதம் ஆகும்.
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பரிசோதனைகளும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் 11 லட்சத்து 33 ஆயிரத்து 602 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் 23 கோடியே 35 லட்சத்து 65 ஆயிரத்து 119 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவிக்கிறது.