மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 43,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,15,99,130 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 197 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,59,755 ஆக உயர்ந்துள்ளது.
நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், பாராளுமன்ற வளாகத்தில் மத்திய அரசின் சுகாதார திட்ட முகாமை சபாநாயகர் ஓம் பிர்லா துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.