கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தற்காலிக ஆய்வக நுட்புனர், அலுவலக உதவியாளர், கணினி ஆப்ரேட்டர் உள்பட 64 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அரசு முத்திரையுடன் கூடிய அறிவிப்பு சமூக வலைதளங்களில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்தது. இதையடுத்து அந்த பணிக்கான விண்ணப்பங்கள் வாங்குவதற்காக சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவக்கல்லூரி அதிகாரிகள், அரசு முத்திரையுடன் சமூக வலைத்தளத்தில் வந்த வேலைக்கான அறிவிப்பு போலியானது. இங்கு காலி பணியிடங்கள் ஏதும் இல்லை. எனவே அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று விண்ணப்பம் வாங்க வந்தவர்களிடம் தெரிவித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் கள்ளக்குறிச்சி அருகே அழகாபுரம் காட்டுக்கொட்டாயை சேர்ந்த சூசைநாதன் மகன் அந்தோணி சேவியர் (வயது 30) என்பவர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், தனக்கு மனித வள மேம்பாட்டு அலுவலர் பணி கிடைத்துள்ளது என்று தெரிவித்ததோடு, அதற்கான பணி நியமன ஆணையையும் கொடுத்துள்ளார். அதனை அதிகாரிகள் வாங்கி பார்த்தபோது, அது போலியானது என்பது தெரிந்தது.
மேலும் இந்த ஆணையை யார் கொடுத்தது என்று அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர் சரியான பதிலை கூறவில்லை. இதேபோல் கணினி ஆப்ரேட்டர் பணிக்கான ஆணையுடன் மற்றொரு வாலிபர் ஒருவரும் வந்தார். அந்த ஆணையும் போலி என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த நிலையில் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் போலீசில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.
அந்த புகாரில், மருத்துவக்கல்லூரியில் காலி பணியிடங்கள் உள்ளது என்று கூறி பொய்யான தகவலை சிலர் பரப்பியுள்ளனர். மேலும் போலியான ஆணைகளை தயார் செய்து பொதுமக்களை ஏமாற்றி மோசடியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். சுமார் 23 பேரிடம் இருந்து பணத்தை பெற்று அவர்களுக்கு போலி பணிநியமன ஆணையை வழங்கியுள்ளனர். இதில் ஒவ்வொருவரிடமும் இருந்து ரூ.2 லட்சம் அளவிற்கு பணம் வாங்கி மோசடி செய்துள்ளனர். எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது. இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.