அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுபொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுபொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள உளுந்தூர்பேட்டை- சேலம் புற வழிச்சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலரும், பறக்கும் படை அதிகாரியுமான சீனிவாசன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் இருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து லாரியில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் நாமக்கல் பகுதியை சேர்ந்த மருதமலை (வயது 45), பெரியசாமி (43), செந்தில் (40) என்பதும், அவர்கள் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு முட்டை சப்ளை செய்துவிட்டு அதற்கான பணத்தை வசூலித்து வருவதாக கூறினர்.
இருப்பினும் அவர்கள் லாரியில் வைத்திருந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும்படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.