சேந்தமங்கலம் அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உத்திரகிடிகாவல் ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சி மன்ற 7-வது வார்டு உறுப்பினராக இருந்து வந்தவர் பெருமாள் (வயது 40). இவர் அங்கு கேபிள் ஆபரேட்டராகவும், ஊராட்சி மன்றத்தில் டேங்க் ஆபரேட்டராகவும் பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் அவர் வெட்டுக்காடு பஸ் நிறுத்தத்தில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனை அறிந்த அந்த அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆவேசமடைந்து வெட்டுக்காடு ராசிபுரம் மெயின் ரோட்டில் திரண்டனர். பின்னர் அவர்கள் பெருமாளை வெட்டிக்கொலை செய்த நபர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. இதுகுறித்து அறிந்த பேளுக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்கள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் நேற்று இரவு அங்கு பரபரப்பு காணப்பட்டது. கொலை செய்யப்பட்ட பெருமாளுக்கு எதிரிகள் உள்ளார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பெருமாளுக்கு ஜெயம் (30) என்ற மனைவியும். 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேந்தமங்கலம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.ஆர்.பி. சுரேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இடத்தில் பெருமாளும் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.