கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிற இந்தியா, கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிற இந்தியா, கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. இவ்விரு தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை வழங்கி, உள்நாட்டில் உபயோகத்துக்கு கொண்டு வந்ததுடன், உலகின் பல நாடுகளுக்கும் இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்திய தடுப்பூசிகளைப் பெறுவதற்காக உலகின் பல நாடுகளும் காத்திருக்கின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவரும், பேய்லர் மருத்துவ கல்லூரியின் தேசிய வெப்ப மண்டல மருத்துவ நிறுவனத்தின் டீனுமான டாக்டர் பீட்டர் ஹோடெஸ், காணொலி காட்சி வழியாக நடந்த ஒரு கருத்தரங்கில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அமெரிக்கா உருவாக்கியுள்ள இரு எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிகள், உலகின் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், பி.சி.எம்., ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போன்ற உலகளாவிய பல்கலைக்கழகங்களுடன் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள இந்திய தடுப்பூசிகள், உலகத்தை கொரோனாவில் இருந்து மீட்டிருக்கின்றன. அந்த வகையில், இந்தியாவின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.
கொரோனா வைரசுக்கு எதிரான போரில், உலகிற்கு இந்தியாவின் பரிசுதான் தடுப்பூசிகள் ஆகும்.
இந்தியாவிடம் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது. அதை நானே பார்க்கிறேன். நான் இந்தியாவில் உள்ள எனது சகாக்களுடன் வாரம்தோறும் காணொலி காட்சி வழியாக உரையாடுகிறேன். ஒரு பரிந்துரையைச் செய்தால், அதை சில நாட்களில் செய்து முடித்து விடுகிறார்கள். பெயருக்கு அல்ல சிறப்பாகவே அதுவும் நம்ப முடியாத வகையில் சிந்தனையுடனும், படைப்பாற்றலுடனும் செய்கிறார்கள்.
கெரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில், இந்தியாவின் மாபெரும் முயற்சிகள் உலகில் உண்மையிலேயே வெளிவராத ஒரு கதை. எனவேதான் இதை சொல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Discover more from Kallakurichi News
Subscribe to get the latest posts sent to your email.