மகா சிவராத்திரி விழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியும், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் வளாகம் முழுவதும் பழங்கள், மலர்கள், மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்களுக்கு குடிநீர், மோர் மற்றும் குழந்தைகளுக்கு பால் ஆகியவை வழங்கப்பட்டது.
பக்தர்களுக்கு தட்டுப்பாடு இன்றி வினியோகம் செய்ய லட்டு, அன்னப் பிரசாதம் ஆகியவை கூடுதலாக தயாரித்து இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. இதுதவிர சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு இலவச பிரசாதங்களும் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.
கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக சொர்ணமுகி ஆற்றில் தேவஸ்தான அதிகாரிகள் குளியல் அறைகள் மற்றும் குழாய்கள் அமைத்திருந்தனர். அதில் பக்தர்கள் புனித நீராடினர். பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியும், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் அருகில் தூர்ஜெட்டி கலையரங்கத்தில் நேற்று காலையில் இருந்து இரவு முழுவதும் மற்றும் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையிலும் கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவு, நாட்டிய நடன நிகழ்ச்சிகள் நடந்தது.
கண் விழித்து சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்காக பல்வேறு பகுதிகளில் அன்னதானம், குடிநீர் மற்றும் குளிர்பானம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. நகரில் கடும் வாகனப் போக்குவரத்து ெநரிசல் காணப்பட்டது. வாகனங்களில் வந்த முக்கிய நபர்கள் மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்பட்டனர்.