ஆலங்குளம் அருகே நள்ளிரவில் லாரி-கார் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்கள்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 35), இவர் தமிழர் விடுதலைக் களம் என்ற அரசியல் கட்சியின் மாவட்ட நிர்வாகியாக உள்ளார்.
இவரது நண்பர் கீழ வெள்ளக்காலை சேர்ந்த ஹரிஹரசுதன் (29). இவர் அந்த கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி செயலாளராக உள்ளார்.
நேற்று இவர்கள் நெல்லையில் நடந்த அக்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, நள்ளிரவு 1.30 மணியளவில் காரில் தென்காசி மாவட்ட செயலாளர் கட்டபொம்மன் மற்றும் நிர்வாகிகள் மகேந்திர குமார், மதன் ஆகியோருடன் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
இவர்கள் சென்ற கார் ஆலங்குளம் அருகே சென்ற போது எதிரே, கரும்பு ஆலையின் பழைய எந்திரங்களை ஏற்றிக்கொண்டு ஒரு டாரஸ்லாரி வந்தது.
ஆலங்குளம் தொட்டியான்குளம் அருகே உள்ள திருப்பத்தில் திரும்பும் போது, லாரியின் ஒரு பக்கத்தில் எந்திரத்தின் இரும்பு பாகம் வெளியே நீண்டு இருந்தது. அந்த இரும்பு பாகம் எதிரே வந்த கார் மீது மோதியது.
இதில் காரின் முன்புறம் இருந்த சிவகுமார், ஹரிஹரசுதன் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்கள். காரை ஓட்டிவந்த தமிழர் விடுதலைக்களம் கட்சி மாவட்ட செயலாளர் கட்டபொம்மன், மகேந்திரகுமார், மதன் ஆகிய 3 பேரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்கள்.
உடனடியாக அந்த பகுதியில் உள்ளவர்கள் விரைந்து வந்து அவர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு ஆலங்குளம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக லாரி டிரைவரான மன்னார்குடியைச் சேர்ந்த மோதிலால் (60), என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடும் தமிழர் விடுதலைகளம் நிர்வாகிகளை கட்சி தலைவர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.