உப்பென்னா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை அடுத்து நடிகர் விஜய் சேதுபதிக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் கடைசி விவசாயி, நவரசா, மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் உள்ளன. இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
அண்மையில், தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான உப்பென்னா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதனால் இவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
இந்நிலையில், மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘டிரைவிங் லைசன்ஸ்’ படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம்சரண் கைப்பற்றி உள்ளார். இதில் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ரவிதேஜா நடிக்க உள்ளாராம். மேலும் அப்படத்தில் இடம்பெறும் போலீஸ் கதபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.