உயிர் காக்கும் ரத்ததானம் செய்வதற்கு முன்னும் பின்னும் சில விஷயங்களை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
* ரத்த தானம் செய்ய முன்வருபவர்களுக்கு முதலில் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சரிபார்க்கும் பரிசோதனை மேற்கொள்வார்கள். உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்வதற்கு ரத்தத்தில் போதுமான அளவு ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், ரத்ததானம் செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
* ரத்த தானம் செய்வதற்கு முன்னும், பின்னும் போதுமான அளவு ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது முக்கியம். அது ரத்தத்தில் போதுமான அளவு ஹீமோகுளோபின் இருப்பதை உறுதி செய்ய உதவும். ரத்ததானம் செய்த பிறகு அதிக சோர்வு ஏற்படுவதையும் தடுக்கும்.
* சிலருக்கு ரத்ததானம் செய்த உடனே தலைச்சுற்றல், சோர்வு, நினைவு இழப்பு போன்ற பாதிப்புகள் நேரக்கூடும். இருப்பினும் ரத்ததானம் செய்வதற்கு முன்னும், பின்னும் ஊட்டச்சத்து மிக்க உணவை சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சினைகளை தவிர்க்கலாம். ரத்ததானம் செய்யும்போது ஏற்படும் வைட்டமின்கள், இரும்பு சத்து இழப்பை ஈடுகட்டவும் முடியும்.
* ரத்த தானம் செய்வதற்கு முன்பு குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவதுதான் நல்லது. அதிக கொழுப்புள்ள உணவை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்பு, ரத்தத்தை பரிசோதிக்கும் செயல்முறைக்கு இடையூறு ஏற்படுத்திவிடும். காலையில் ரத்த தானம் செய்வதாக இருந்தால் காலை உணவுடன் ஏதாவதொரு பழம் சாப்பிடலாம். குறைந்த கொழுப்புள்ள பால் பருகலாம்.
* ரத்ததானம் செய்ய திட்டமிட்டிருந்தால் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். அது உடலுக்கு தேவையான இரும்பு சத்தை உறிஞ்சுவதற்கு உதவும். ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களின் சாறுகளையும் பருகலாம்.
* உடலில் உள்ள திசுக்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை கொண்டு செல்வதற்கு இரும்புச்சத்தும் இன்றியமையாதது. உடலில் இரும்பு சத்து குறைந்தால் ஆரோக்கியமான ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதில் சிக்கல் நேரும். உடல் இயக்க செயல்பாடுகளை தக்கவைப்பதற்கு புதிய ரத்த அணுக்களை உடல் உருவாக்கிக்கொண்டே இருக்கவேண்டும். இரும்புச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்வது போதுமான இரும்பு சத்தை தக்கவைத்துக்கொள்ளவும், ரத்த அணுக்களின் எண்ணிக்கையை சீராக பராமரிக்கவும் உதவும். கீரை, மீன், சிவப்பு இறைச்சி, கோழி, திராட்சை, பீன்ஸ், வேர்க்கடலை, வெண்ணெய், நட்ஸ் வகைகள் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
* புதிய ரத்த அணுக்களை உற்பத்தி செய்வதற்கு போலிக் அமிலம் அவசியமானது. இது ரத்ததானம் செய்யும்போது இழக்கும் ரத்த அணுக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு உதவும். கீரை, காலே உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகள், ஆரஞ்சு சாறு, தானியங்கள், அரிசி போன்றவற்றிலும் போலிக் அமிலம் உள்ளடங்கி இருக்கிறது.
* பால், பாலாடைக்கட்டி, தயிர் போன்ற பால் பொருட்களில் ரைபோபிளேவின் செறிவூட்டப்பட்டுள்ளது. இது வைட்டமின் பி2 என்றும் அழைக்கப்படுகிறது. இது ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குவதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டை ஆற்றலாக மாற்றுவதற்கு ரைபோபிளேவின் உதவும். ஒரு சிலர் ரத்த தானம் செய்தபிறகு பலவீனமாக உணரலாம். அந்த சமயத்தில் ரைபோபிளேவின் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்க உதவும். முட்டை, பச்சையிலை காய்கறிகள், தானியங்கள், ப்ரோக்கோலி போன்றவைகளில் ரைபோபிளேவின் அதிகம் உள்ளது.
* ரத்த தானம் செய்யும் போது, உடலுக்கு ஆரோக்கியமான ரத்த அணுக்களை உருவாக்க வைட்டமின்கள் தேவைப்படுகிறது. ரத்த தானம் செய்தபின் வைட்டமின் பி 6 கொண்ட உணவுகள் பல வழிகளில் உடலுக்கு நன்மை பயக்கும். உருளைக்கிழங்கு, விதைகள், நட்ஸ் வகைகள், முட்டை, சிவப்பு இறைச்சி, கீரை மற்றும் வாழைப்பழங்களில் வைட்டமின் பி 6 நிறைந்திருக்கிறது.
* ரத்த தானம் செய்தபிறகு இத்தகைய ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம் இழந்த ரத்த அணுக்களை மீண்டும் உருவாக்க முடியும். சாப்பிடும் உணவுகளுடன் திரவங்களும் இருக்க வேண்டும். திரவ உணவுகளை சாப்பிடுவது 24 முதல் 48 மணி நேரத்தில் உடல் இயல்பு நிலைக்கு திரும்ப வித்திடும். அந்த சமயத்தில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.